சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி வரை இந்த பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாணவ - மாணவிகள் பொதுத் தேர்வு எழுத தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 3 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்வை, 4 லட்சத்து 10 ஆயிரத்து 138 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 164 மாணவிகளும் எழுதுகின்றனர். மேலும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் இந்த முறை பன்னிரென்டாம் பொதுத் தேர்வு எழுதுகிறார். அதேபோல் தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் இந்த முறை பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், இருக்கை உள்ளிட்ட வசதிகள் மற்றும் தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 870 பேரும், மாணவர்களை கண்காணிக்கும் பறக்கும் படை, நிலையான படை என 4 ஆயிரத்து 235 பேரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். வினாத்தாள், புகைப்படம் மற்றும் ஹால்டிக்கெட் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றதும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:லாஸ்ட் ஒன் ஹவர் படிக்காதீங்க.. +12 மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு டிப்ஸ்..