கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை அவமதிக்கும் வகையில், ட்விட்டரில் கருத்து பரப்பியதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பெண் பிரமுகர்கள் பாஜகவுக்கு தொடர்ச்சியாக பதிலடி கொடுத்துவருகின்றனர்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா வியாழக்கிழமை (டிச.31) மம்தா பானர்ஜி புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, “ஐந்து மாதங்களுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தீதி (சகோதரி) ஏற்கனவே செய்யத் தொடங்கி விட்டார்” எனத் தெரிவித்திருந்தார். அந்தப் புகைப்படம் மம்தா பானர்ஜி பிர்பம் மாவட்டத்தில் இருந்து கொல்கத்தா திரும்பும் போது பல்லவ்பூர் கிராமத்தில் எடுக்கப்பட்டது.
இந்தக் கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதர், “ஒரு பெண்ணின் இடம் சமையலறையில் இருப்பதாக நினைக்கும் பாஜகவின் கருத்துக்களால் நாடு நிரம்பியுள்ளது” என்று கூறினார். மேலும், “நினைவில் கொள்ளுங்கள் - பெண்களை மீண்டும் சமையலறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள பாஜகவின் தவறான கருத்துக்களால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. கைலாஷ் விஜயவர்கியா குடும்பத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மரியாதையை இதன்மூலம் நினைத்துப் பார்க்க முடிகிறது” என்றார்.