கொல்கத்தா :லஞ்சப் புகாரில் சிக்கி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணாநகர் வடக்கு நாடியா மாவட்டத் தலைவராக நியமித்து தனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவையில் எழுப்பிய 60 கேள்விகளில் 50க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், அதில் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் வாங்கியதாகவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதினார். அதேநேரம், பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகார் கடிதத்தை மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர் ஓம் பிர்லா அது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.