ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. லட்டு பிரசாதம் பிளாஸ்டிக், துணி அல்லது பேப்பர் பைகள் மூலம் வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்தநிலையில், லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்க முடியும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப்பெட்டிகளை கவுன்ட்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விரைவில் மூன்று விலை அளவுகளில் ஓலைப் பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கிச்செல்லும்போது, விற்பனை செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:"சமாஜ்வாதி ரவுடியிசத்தை ஆதரிக்கிறது" - யோகி ஆதித்யநாத்தின் பேச்சால் உ.பி. சட்டப்பேரவையில் அமளி!