தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370; சிறப்பு அந்தஸ்தின் தோற்றம் முதல் நீக்கம் வரையிலான முழு வரலாறு! - ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து இந்த சட்டப்பிரிவின் தொடக்கம் முதல் தற்போதைய திருத்தம் வரை குறித்த தகவல்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 8:30 AM IST

சென்னை:அரசியலமைப்புச் சட்டத்தின்படி சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தது ஜம்மு காஷ்மீர் மாநிலம், கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தீவிரவாத ஊடுருவல், தேசியப் பாதுகாப்பு போன்றவற்றை முன்னிறுத்தி, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரிவு-370-ஐ ரத்து செய்தது.

இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இதையடுத்து இந்த வழக்கிற்கு இன்று (டிச.11) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே. அந்த சட்டம் நிரந்தரமான வசதியைக் கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திரப் போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி" என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவு-370 இன்றோ, நேற்றோ நடைமுறைபடுத்தப்பட்டது கிடையாது. இதன் வரலாறு இந்திய சுதந்திரத்தில் இருந்து தோற்றம் காண்கிறது.

அக்டோபர் 26, 1947: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆயுத மோதலைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் மற்றும் இதர பழங்குடியினருடன் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் கடைசி அரசராக கருதப்படும் ஹரி சிங், இந்தியாவின் அப்போதைய டொமினியனுடன் இணைவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவர் மூன்று முக்கிய விதிவிலக்குகளுடன் மாநிலத்தில் நாடாளுமன்ற ஆட்சிக்கு வழிவகுத்த நிலையில், வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் யூனியனின் அதிகாரங்களுக்கு தடை விதித்தார்.

ஜனவரி 1948: காஷ்மீரில் பாகிஸ்தானின் கட்டாய ஆக்கிரமிப்புகளை எதிர்த்து ஐக்கிய நாடுகளின் சபையில் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா முன்வைத்தது. இதையடுத்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் UNSC - 47 என்ற தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. இந்த தீர்மானத்தின்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு படைகளை திரும்பப் பெற்று, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு மூலம் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேருவது குறித்து அப்பகுதி மக்களே முடிவெடுக்கப்படும் என்பதாகும்.

1949: சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டு அனைவரின் ஒப்புதலை பெற்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் சார்பாக ஷேக் அப்துல்லா, மிர்சா முகமது பெக், மௌலானா முகமது சயீத் மசூதி மற்றும் மோதிராம் பக்ரா ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சபையில் இணைகின்றனர்.

தொடர்ந்து வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு, பின்வரும் மூன்று மாதங்களில் என்.கோபாலசாமி அய்யங்கார் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோருடன் இணைந்து திருத்தம் காண்கிறது. அப்போது உருவானதே பிரிவு 370. விவாதத்தின்போது, தற்காலிகமாக பிரிவு-360ஆக அழைக்கப்பட்டு வந்தது.

ஜனவரி 26, 1950: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து சட்டப்பிரிவு 370 மூன்று கட்டமைப்புகளை அமைத்தது. இந்த சட்டப்பிரிவின்படி, இந்தியா ஜம்முவின் ஒப்புதல் இல்லாமல் ஜம்முவில் எந்த ஒரு சட்டத் திட்டங்களையும் அமல்படுத்த அதிகாரம் இல்லை.

மேலும், இந்த சட்டத்தின்படி மாநிலத்தின் யூனியனாக கருதப்படும் இந்தியாவின் அனைத்து விதிகளிலிருந்தும் ஜம்மு காஷ்மீருக்கு விலக்கு அளிக்கப்படும். பிறப்பிக்கப்படும் எந்த சட்டதிட்டத்தை மாற்றியமைக்கவோ அல்லது வரையறுக்கவோ ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் செயல்படுத்தவேண்டும். மூன்றாவதாக, ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை அனுமதியின்றி சட்டப்பிரிவு 370-இல் திருத்தமோ அல்லது நீக்கமோ கூடாது.

ஜனவரி 26 1950(2): சட்டப்பிரிவு 370-இன்படி, அப்போதைய குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத், ஜம்மு காஷ்மீரில் பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் ஆளுமையை உணர்த்தும் வகையில் அரசியலமைப்பு ஆணை (ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான விண்ணப்பம்) 1950 ஒன்றை வெளியிட்டார். அதன்படி தகவல் தொடர்பு, பாதுகாப்பு, மற்றும் வெளியுறவு குறித்து யூனியனின் மேற்பார்வைக்கு காலம் நிர்ணயிக்கப்பட்டது.

அக்டோபர் 31, 1951: ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை ஸ்ரீநகரில் இலையுதிர் காலத்தில் உருவானது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவையில் 75வது நபர் சேர்க்கப்பட்டார். ஜம்முவின் அப்போதைய பிரதமர் ஷேக் அப்துல்லாவின் தலைமையிலான நேஷனல் கான்ஃபிரன்ஸ் கட்சி 75 நிர்வாகிகளைக் கொண்டு வலம் வந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கென்று தனிச்சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வந்தது.

1952: ஜம்மு காஷ்மீர் அரசும், இந்திய அரசும் 1952-இல் டெல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சட்டப்பிரிவு 248-இன் கீழ் மாநிலத்தின் பட்டியலுக்குள் உட்படாத நாடாளுமன்றத்தின் அதிகார பயன்படுத்தலை உறுதி செய்கிறது. பொதுவாக மற்ற மாநிலங்கள் மீது நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பில் சில பிரிவிகளின்படி மாநிலத்தின் அடிப்படை உரிமைகள், குடியுரிமை, வர்த்தகம், தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற அதிகாரங்கள் போன்று அனைத்திலும் டெல்லி ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்றத்தின் அதிகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 14, 1954:1952ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு ஜம்மு காஷ்மீரின் ஒருமைப்பாட்டை உறுதி செய்தது. தொடர்ந்து இதன் மூலம் ஜம்முவின் நிரந்திர குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவான 35 A-க்கு வழிவகுத்தது. இந்த உத்தரவு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 17, 1956: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

1959: குடியரசுத் தலைவரின் அனைத்து உத்தரவுகளும் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலுக்கு உட்பட்டது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

1962: குடியரசுத் தலைவரின் உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் விதிகளில் குடியரசுத் தலைவர் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, 370வது பிரிவில் உள்ள "திருத்தம்" என்ற வார்த்தையை விரிவாக விளக்க வேண்டும் என்று கூறியது.

1968: பொது சபை கலைக்கப்பட்ட போதும், பிரிவு 370 அமலில் இருந்ததை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், பிரிவு-370 அரசியலமைப்புச் சபை இல்லாத நிலையிலும், அரசியலைப்பில் நிரந்தர நிலையை பெற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்தியது.

1990: இந்திய ஆட்சியை எதிர்த்து இந்திய ராணுவத்திற்கு எதிராக காஷ்மீரி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில், நூற்றுக்கணக்கான காஷ்மீரி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். வன்முறை அதிகரித்ததனால் பிறப்பிடமான காஷ்மீரில் இருந்து பலரும் வெளியேறினர். இதைத் தொடர்ந்து சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றியது, மத்திய அரசு. இந்தச் சட்டம் ஆயுதப் படைக்கு கூடுதல் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.

1995: நாடாளுமன்றத்தில் பி.வி.நரசிம்மா ராவ், பிரிவு-370 சட்டப்பிரிவை நிலைநிறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தியாவின் இன்றியமையாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் கருதப்படுவதனால், குடியரசுத் தலைவரின் ஆட்சியை நீடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மார்ச் 2015:2015ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது.

ஜூலை 2016: இந்திய ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டரான புர்ஹான் வானி கொல்லப்படுகிறார். இது ஜம்மு காஷ்மீரில் பெருமளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த போராட்டத்தின்போது 65 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜூன் 2018: 2018ஆம் ஆண்டு பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால், ஆளுநர் சத்யபால் மாலிக் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவையை கலைத்தார்.

டிசம்பர் 20, 2018:சட்டப்பேரவை கலையப்பட்டதையடுத்து, சட்டப்பிரிவு 356-இன்படி, குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, 2019 ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 5, 2019: இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை (சட்டப்பிரிவு 370) ரத்து செய்தது.

ஆகஸ்ட் 6, 2019: சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து, முதல் மனுவை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா. அவரைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷகிர் ஷபீர் இரண்டாவது மனுவாக தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 10, 2019: மாநில அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து குடிமக்களின் உரிமைகளை மக்களின் அனுமதியின்றி பறித்துவிட்டதாக, ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சியாக கருதப்படும் என்.சி (National Conference) கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 24, 2019: தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் குறித்து விதிகளை அமைக்கும் மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீரின் நிர்வாகத்தை ஆதரித்து PTI உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 28, 2019: பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கக்கோரி, காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் மனுத் தாக்கல் செய்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

செப்டம்பர் 19, 2019: 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைந்தது.

மார்ச் 2, 2020: 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு விவாதமின்றி ரத்து செய்ததையடுத்து எதிர்த்து, ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஏப்ரல் 25, 2022:இதையடுத்து மனுதாரர் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து எதிர்த்து, விரைவாக இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

ஜூலை 11, 2023: சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உறுதியளித்தது.

ஆகஸ்ட் 2, 2023: சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் மீதான விசாரணையை தொடங்கியது.

செப்டம்பர் 5, 2023: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட 23 மனுக்களை, தொடர்ந்து 16 நாட்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

டிசம்பர் 11, 2023: சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த விசாரணையின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து அரசின் முடிவை உறுதி செய்து, லடாக் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேஷமாக அறிவிக்கப்பட்டது செல்லும் என்றும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டு, முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க:"ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து..!

ABOUT THE AUTHOR

...view details