வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலைகளை தினமும் வழிபட அனுமதிகோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்தவும், அதை வீடியோவாகப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மசூதி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை வாரணாசி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கை கடந்த மே மாதம் 24ஆம் தேதி முதல் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள்களின் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரிய மனுவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி வழக்குத்தொடர்ந்திருந்தது.