ராஜமலை (கேரளா):கேரளா மாநிலம், மூணாறு அருகில் உள்ள ராஜமலை பகுதியில் வசிக்கும் மக்கள் பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தொழுவத்தில் கட்டி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்தப் பகுதியில் வந்த புலி ஒன்று, மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த 5 மாடுகளை கழுத்தில் கடித்து, குதறிக்கொன்றுள்ளது. அந்தப்பகுதி மக்கள் மாட்டின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, அங்கு இருந்த புலி தப்பி வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது.
அதே புலி மீண்டும் நேற்று இரவு தொழுவத்திற்கு வந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளை அதே பாணியில் அடித்துக்கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இரு நாட்களில் 10 மாடுகளை அடித்துக்கொன்ற இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். பின்னர், இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததை அடுத்து இடுக்கி மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வெறி கொண்டு அலையும் புலியினை மயக்க ஊசி நிரப்பிய துப்பாக்கியினால் சுட்டுப்பிடிக்க முடிவு செய்து, இதற்காக சிறப்பு படை அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குச்சென்றுள்ளனர். மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டு வைக்கவும், ஏற்பாடு செய்யபட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
புலியின் நடமாட்டம் காரணமாக இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். மேலும் பலர் தேயிலை தோட்ட வேலைக்குச்செல்லாமல் உள்ளனர்.
இதையும் படிங்க:தேனி அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை