லக்னோ: பீகார் மாநிலம் கியூல் பகுதியை சேர்ந்த தம்பதியர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸூக்கு கடந்த திங்கள்கிழமை கொல்கத்தா - அமிர்தசரஸ் இடையே இயங்கும் அகால் தக்த் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஏசி பெட்டியில் பயணம் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அக்பர்கஞ்ச் அருகே சென்று கொண்டிருந்த போது, அதே பெட்டியில் குடிபோதையில் பயணம் செய்த நபர், திடீரென பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண் அலறியடித்து எழுந்தார். இச்சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பெண்ணின் கணவர் சார்பாக் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெண்ணின் மீது சிறுநீர் கழித்தவர் பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்த முன்னா குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரயில்வே துறையில் கடந்த 15 ஆண்டுகளாக டிக்கெட் பரிசோதகராக இருக்கும் முன்னா குமார், கடந்த சில ஆண்டுகளாக உத்தரபிரதேச மாநிலம் சஹரான்பூரில் ரயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் பணியில் இல்லாத சூழலில், மது அருந்தியபடி ரயிலில் பயணம் செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
குடிபோதையில் இருந்த அவர், பெண்ணின் தலையில் சிறுநீரை கழித்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.