திரிசூர்(கேரளா): கேரளாவில் உள்ள குன்னம்குளத்தைச் சேர்ந்த இந்துலேகா என்ற பெண்ணை அப்பகுதி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்பெண் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்துலேகா அவரது தாயை சொத்துக்காக தேநீரில் எலி மருந்து, கலந்து கொடுத்துக் கொன்றுள்ளார். இந்நிலையில் இந்துலேகாவின் தந்தை தேநீரை குடிக்காததால் காப்பாற்றப்பட்டார்.
சில தினங்களாக இந்துலேகாவின் பெற்றோருக்கும், அவருக்கும் சொத்து குறித்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்துலேகாவிற்கு 8 லட்சம் ரூபாய் கடன் இருந்ததால், சொத்தை அவருக்கு வழங்குமாறு பெற்றோரிடம் சண்டைப் போட்டுள்ளார். பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட்டால், சொத்து தானாக அவருக்கு வந்து விடும் என எண்ணிய சந்திரலேகா தேநீரில் எலி மருந்தை கலந்து, தாய் ருக்மணி மற்றும் தந்தை சந்திரன் என இருவருக்கும் வழங்கியுள்ளார். சண்டையினால் உண்டான கோபத்தால், அவரது தந்தை சந்திரன் தேநீரை குடிக்கவில்லை. அவரின் தாய் மட்டும் குடித்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் தேநீரை அருந்தியதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பின்னர், உணவில் விஷம் விழுந்துள்ளதால் தனது தாய் அவதிப்பட்டதாகக் கூறி, இந்துலேகா, உடல்நிலை சரியில்லாத அவரது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். சிகிச்சையின்போது அவரது தாயார் இறந்தார். மேலும் அவரது பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எலி விஷம் இருப்பது தெரியவந்தது.