ஜெய்சல்மர்:ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இந்திய ராணுவத்தினர் வருடாந்திர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பயிற்சியின் போது இந்திய ராணுவத்தினர் ஏவுகணைகளை ஏவி சோதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏவுகணை இடைமாறிச் சென்று வெடித்து சிதறியது.
மூன்று ஏவுகணைகள் இடைமாறிச் சென்று வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அஜாசர் கிராமத்திற்கு அருகில் உள்ள கச்சாப் சிங் வயல்வெளியிலும், மற்றொரு ஏவுகணை சத்யயா கிராமத்தின் அருகில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் விழுந்த ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீட்டனர். மூன்றாவது ஏவுகணை வீசப்பட்ட நிலையில் அதன் பாகங்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏவுகணை விழுந்த விபத்துக்குள்ளான இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் விழுந்து நொறுங்கிய ஏவுகணைகளின் பாகங்களை மீட்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். அதேநேரம் இந்த விபத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.