போபால்: கரோனா அச்சுறுத்தல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த மத்திய பிரதேச மாநிலம் சட்டர்பூர் மற்றும் திகாமகர் பகுதியைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பேருந்தின் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ம.பியில் 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலி - மீண்டும் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்
மத்தியப் பிரதேசத்தில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்திற்குள்ளானதில் மூன்று வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்போது, பேருந்து குவாலியர் மாவட்டம் ஜோராசி பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மூன்று வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி காவல்துறையினர், "டெல்லியிலிருந்து புறப்பட்ட இந்தப் பேருந்து அதிகப்படியான பயணிகளுடன் பயணித்துள்ளது. அதுமட்டுமின்றி பேருந்தின் ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.