டெல்லி : விவசாயிகளின் பெரும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (நவ.29) முறைப்படி வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் ராகேஷ் திகைத் ஈடிவி பாரத்துக்கு அளித்த நேர்காணலில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் ஒரு நோய். இந்த நோய் தீர்ந்துவிட்டது. எனினும் விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் தொடரும்” என்றார்.
மேலும் மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசாங்கம் தலைவணங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை, இது விவசாயிகளின் பிரச்சினை. இது தீர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதேபோல் விவசாயிகளின் கோரிக்கைகள் மீதும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக நவ.19ஆம் தேதி குரு பிரபுத் தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும்” என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழச்சி தங்கபாண்டியனுடன் சசிதரூர் செல்பி!