தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் ரயில் மோதி 3 யானைகள் பலி..! ரயில்வே அதிகாரிகள் கூறியதென்ன..? - ரயில் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்க வழி

Elephants Died After Hit By Train: மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரில் சரக்கு ரயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன.

Three elephants including a calf died after hit by a parcel train in West Bengal
ரயில் மோதி யானைகள் பலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 6:52 PM IST

அலிபுர்துவார் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் (Alipurduar) மாவட்டத்தில் உள்ள ராஜபத்காவா (Rajabhatkhawa) வனப்பகுதியில் இன்று (நவ. 27) காலை ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அலிபுர்துவாரில் இருந்து சிலிகுரி (Siliguri) நோக்கி சென்ற சரக்கு ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் குட்டி உட்பட 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சப்ரமாரி சரணாலயத்தில் (Chapramari Sanctuary) கர்ப்பிணி யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு மீண்டும் மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அங்குள்ள வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சில காலமாக, ரயில் மோதி வன விலங்குகள் உயிரிழப்பது குறைந்திருந்தது. இந்நிலையில் இந்த விபத்து மூலம் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தவிர்க்க ரயில்வே எடுத்த நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழத்துவங்கியுள்ளது.

யானைகள் இறந்த தகவல் கிடைத்ததும் பக்ஸா (Buxa) புலிகள் திட்ட அதிகாரிகள் மற்றும் அலிப்பூர்துார் கோட்ட ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். யானைகள் மீது மோதிய ரயில் வந்த வேகம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதைத் தடுக்க ஐடிஎஸ் எனும் ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு (IDS - Intrusion Detection System) தொழில்நுட்பத்துக்கு ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்வதாக ஆகஸ்ட் மாதம் ரயில்வே அறிவித்திருந்தது.

ஆனால், சம்பவம் நடந்த ராஜபத்காவா - கல்சினி பிரிவுவில் ஐடிஎஸ் அமைப்பு இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார். வடகிழக்கு எல்லை ரயில்வேயின் (Northeast Frontier Railway) அலிபுர்துவார் ரயில்வே கோட்டத்தின் சில பகுதிகளில் ஐடிஎஸ் செயல்படுவதாகக் கூறிய அவர், அலிபுர்துவார் - கல்சினி (Kalchini) பிரிவில் இன்னும் ஐடிஎஸ் நிறுவப்படவில்லை என்றார்.

வடகிழக்கு எல்லை ரயில்வேயில், லும்டிங் (Lumding) மற்றும் ரங்கியா (Rangia) பிரிவுகளுடன், முழுப் பகுதியையும் ஐடிஎஸ்-ன் கீழ் கொண்டு வர டெண்டருக்கான செயல்முறை நடந்து வருகிறது எனவும், ஏற்கனவே ஐடிஎஸ் பொருத்தப்பட்ட இடங்களில் யானைகள் ரயிலில் அடிபட்ட சம்பவம் ஏதும் இல்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 16வது நாளாக தொடரும் மீட்பு பணி.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details