கோவிட்-19 இரண்டாம் அலையை இந்தியா சமாளிக்க முடியாமல் திணறிவரும் நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரங்களின் பல மருத்துவமனைகளில் உயிர் காற்று இல்லாமல் நோயாளிகள் தவித்துவருகின்றனர்.
மக்களின் படுந்துயரை உணர்ந்துள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரில் காற்றை நிரப்பித் தருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குப்தா, ரிம்ஜிம் இஸ்பத் என்ற பெயரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகிறார்.
இவரது தொழிற்சாலை நாள்தோறும் ஆயிரம் சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் போடும் அளவிற்குத் திறன்பெற்றது. நாடு பேரிடரைச் சந்தித்துவரும் சூழலைக் கருத்தில்கொண்டு, இவர் அனைத்து சிலிண்டர்களுக்கும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு ஆக்சிஜனை நிரப்பித் தருகிறார்.