தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருவள்ளுவர் ஞானம், அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து பெருமிதம்!

France Thiruvalluvar statue: திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றது எனவும் திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 8:11 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்த போது இந்திய வம்சாவளிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அனுமதியோடு இங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என கூறியிருந்தார். அதன்படி உரிய அனுமதியுடன் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான் என்ற இடத்தில், பிரான்ஸ் வொரெயால் தமிழ் கலாசார மன்றம் சார்பில், திருவள்ளுவர் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று(டிச.10) திறந்து வைத்தார்.

இந்நிலையில், பிரான்சில் உள்ள திருவள்ளுவர் சிலையின் புகைப்படத்தைத் தனது எக்ஸ்(X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன" என தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்காகப் பிரதமர் மோடிக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், "பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டுப் பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.

இன்று, பிரதமர் மோடி நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது. நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு பாஜக மற்றும் மற்றும் தமிழ் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Exclusive | "காங்கிரஸ் ஒருபோதும் மக்களை ஏமாற்றாது" - இமாச்சல் முதலமைச்சர் ஈ.டிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details