டெல்லி: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேநேரம், எல்லைப் பகுதியான காசா நகரம் முழுவதும் மிகப்பெரிய சேதம் அடைந்து உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், தங்களது உடமைகள், வீடு மற்றும் உறவினர்களை இழந்தவர்களுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டது. இதன் விளைவாக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதனையடுத்து, இதன் மூலம் இந்தியர்களின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து, அவர்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியானது துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அக்டோபர் 12 அன்று இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து முதலாவதாக 212 இந்தியர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு அக்டோபர் 13 அன்று காலையில் வந்தனர். பின்னர், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை, மாநிலப் பிரதிநிதிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.