காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், “சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்” எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூல் கடந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து புத்தகத்தில் வெளிவந்துள்ள அயோத்தி தொடர்பான கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
முன்னதாக சல்மான் குர்ஷித், அந்தப் புத்தகத்தில் இந்துத்துவத்தை ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் என இரண்டு வழக்கறிஞர்கள் தனித் தனியாக டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
’ஆங்கில அறிவு இல்லை’
இந்நிலையில், தான் ஒப்பான / ஒத்த எனும் பொருள்படும் ’similar’ என்னும் வார்த்தையையே பயன்படுத்தியுள்ளதாகவும், எதிர்க்கருத்துகளை வைப்பவர்கள் போதிய ஆங்கில அறிவற்று இருப்பதால் தெளிவாக மொழிபெயர்த்து புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், "ஆங்கிலத்தில் 'ஒத்த' என்ற வார்த்தை உள்ளது. நான் ஆங்கிலத்தில் எழுதியதற்கு வருந்துகிறேன். அவர்கள் ஆங்கிலத்தில் மோசமாக இருப்பது தெரிகிறது, தெளிவுக்காக அதை மொழிபெயர்க்க வேண்டும்” என்று கேலியாகக் கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இந்து மதத்தின் மீது காங்கிரஸ் கட்சி தாக்குதல் நடத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்து மதத்தைத் தாக்குவது காங்கிரஸின் இயல்பு என்றும் குற்றஞ்சாட்டினார்.
’மதத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் மதத்தின் எதிரிகள்’
இந்நிலையில், "எந்த மதத்தைப் பின்பற்றினாலும், மதத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் மதத்தின் எதிரிகள். ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் ஆகிய அமைப்புகள் இஸ்லாத்தை இழிவுபடுத்துகிறது, ஆனால் எந்த இஸ்லாமிய ஆதரவாளர்களும் அதை எதிர்க்கவில்லை. ஐஎஸ்ஐஎஸும் இந்துத்துவாவும் ஒன்றுதான் என நான் சொல்லவில்லை, ஒரே மாதிரியானவர்கள் என்றே கூறியுள்ளேன்" என சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
மேலும், கல்கிதாமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் கல்கிதாமுக்கு வந்துள்ளேன். மதம் குறித்து எனக்கு வேறுபட்ட கருத்து இருந்திருந்தால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன். இந்து மதம் உலகில் அமைதியைப் பரப்பும் என்று நம்புகிறேன்.
சிலர் இந்து மதத்தை இழிவுப்படுத்த முயற்சிப்பது போல் தெரிகிறது. அவர்கள்தான் இந்து மதத்தின் எதிரிகள். தங்களைக் குறித்த உண்மை வெளியே வந்துவிடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் உண்மையை வெளிப்படுத்தும் எந்தப் புத்தகத்தையும் தடை செய்வார்கள்" என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:நேரு 132ஆவது பிறந்தாள்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி