கான்பூர்:உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 22ஆம் தேதி இரவு, டபௌலி பகுதியிலிருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று(மே.23) காரை திருடிய வழக்கில் மூன்று பேரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் மூவரும் காரை திருடியது தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் பணம் சம்பாதிக்க திட்டம்:
கார் திருட்டில் ஈடுபட்டவர்கள், பழைய கான்பூரின் ராணி காட் பகுதியைச் சேர்ந்த சத்யம் குமார், கத்ரியன் பூர்வா பகுதியைச் சேர்ந்த அமன் கௌதம், பிரம் நகரைச் சேர்ந்த அமித் வர்மா என தெரிகிறது. இதில், சத்யம் குமார், அமன் கௌதம் இருவரும் பி.டெக் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. மூன்றவாது நபரான அமித் வர்மா துப்புரவு பணி செய்பவர். இவர்கள் மூவரும் பீடா கடையில் சந்தித்துள்ளனர். பிறகு நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். மூவரும் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என நினைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கார் ஓட்ட தெரியவில்லை:
இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை திருடி வந்த இவர்கள் முதல் முறையாக காரை திருட முயற்சித்துள்ளனர். டபௌலி பகுதியில் காரை திருடச் சென்றபோதுதான், மூவருக்கும் கார் ஓட்டத் தெரியாது என்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மூவரும் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். அதன் பிறகு, காரை திருடி விற்றுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, காரை தள்ளிக் கொண்டு சுமார் 17 கிலோ மீட்டர் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கராஜில் காரை விற்பனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர். இந்த சூழலில்தான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.