புடாபெஸ்ட்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் இன்று (ஆகஸ்ட் 19) தொடங்குகிறது. இந்த தொடர் வரும் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, பதக்கததை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 25 வயதான இவர், 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் அதே ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், நீரஜ் சோப்ரா இதுவரை தங்கம் வென்றதில்லை. 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மட்டுமே வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் தொடரின் தகுதி சுற்று 25, 26 தேதிகளில் நடைபெற உள்ளது.. இந்த தொடரின் இறுதி போட்டியானது 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்த முறை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்து ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். இவர் இந்த சீசனில் இரண்டு உயர்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அவை இரண்டிலுமே தங்கம் வென்றார். தோஹா மற்றும் லாசேன் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடருக்கு பின்னர் சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப்க்கு தயாராகி உள்ளார்.
இதையும் படிங்க:Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!