டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர், வசந்த சம்பத் துபாரே (55). இவர் கடந்த 2008ம் ஆண்டு பக்கத்துவீட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வசந்த் சம்பத் துபாரேவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றவாளி சம்பத்துக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2014ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து, சம்பத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "எனது தரப்பு வாதங்களை முன்வைக்க விசாரணை நீதிமன்றத்தில் வாய்ப்பு தரப்படவில்லை" எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கை 2017ம் ஆண்டு மே 3ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், சம்பத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக உத்தரவிட்டது.