ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் என்று 2012ஆம் ஆண்டு ஐநா சபை அறிவித்தது. அதற்கு முன்னர், இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக 2009இல் இருந்து அனுசரிக்கப்படுகிறது. இருந்தாலும், பாலின பாகுபாடு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடுகள் இந்தியாவில் மிகவும் அதிகம். கருவுற்ற தாய்மார்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதன்படி தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. பெண் கருக்கள் இரக்கமின்றி அழிக்கப்படுகின்றன. குடும்பத்தினரால் சுமையாக கருதப்படும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு பெண் குழந்தைக்கு அளிக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு முடிவே இல்லை.
1961ஆம் ஆண்டில், ஆறு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 1000 சிறுவர்களுக்கும் 976 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த விகிதம் 2001ஆம் ஆண்டுக்குள் 927ஆகவும், 2011இல் 918ஆகவும் சரிந்தது. பெண் குழந்தை மீதான சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறை எவ்வாறு ஆபத்தானது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. பெண் குழந்தையை காப்பாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2015இல் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் காரணமாக, இந்த விகிதம் 16 புள்ளிகள் அதிகரித்து 934ஆக உயர்ந்துள்ளது. தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி, நாடு முழுவதும் 640 மாவட்டங்களில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 1000 ஆண் குழந்தைகளுக்கு 950 பெண்கள் என்பது ஆரோக்கியமான விகிதமாக இருந்தாலும், இந்தியா அதை அடைவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. கோவிட்-19 காலகட்டத்தின் போது நடந்த ஏராளமான குழந்தை திருமணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி உறுதியாகும் சூழலில் மட்டுமே தேசம் நம்பிக்கையுடன் முன்னேற முடியும்.