மும்பை :மத மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக 51 லட்ச ரூபாய் நிதி வழங்க உள்ளதாக தி கேரளா ஸ்டோரி படக்குழு அறிவித்து உள்ளது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கதையாக்கப்பட்டு உள்ளது.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இந்த படம் பயங்கர விமர்சனங்களை எதிர்கொண்டது. பாதுகாப்பு காரணமாக தமிழ்நாடு, கேரளாவில் இந்த படத்தை திரையிட, திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் முன்வரவில்லை. அதேநேரம் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது.
வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதிப்பதாக மேற்கு வங்க மாநில அரசு விளக்கம் அளித்தது.
அதேநேரம் வடமாநிலங்களில் இந்த படத்திற்கு ஆதரவுக் குரல் வலுத்தது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டில் அதிக வசூல் சாதனை படைத்த பாக்ஸ் ஆபிஸ் படங்களின் வரிசையில் தி கேரளா ஸ்டோரி படமும் இடம் பிடித்தது.
இந்நிலையில் மத மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கு உதவ திட்டமிட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, மதமாற்றம் என்ற போர்வையில் சிக்கி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு உதவி தி கேரளா ஸ்டோரி படக் குழு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 300 பெண்களுக்கு உதவ 51 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக விபுல் ஷா தெரிவித்தார். முதற்கட்டமாக 26 பெண்கள் கண்டறியப்பட்டு அவர்களுடன் தி கேரளா ஸ்டோரி திரைப்படக் குழு பேசி வருவதாக கூறினார்.
கடந்த 11 நாட்களில் மட்டும் ஒன்று முதல் 1 கோடியே 15 லட்சம் பேர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்து உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இதுவரை 146 கோடியே 74 லட்ச ரூபாய் வரை தி கேரளா ஸ்டோரி படம் வசூலித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
பதான் திரைப்படம் ஏறத்தாழ 543 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தில் து ஜூத்தி மெயின் மக்கார் (Tu Jhoothi Main Makkaar) திரைப்படம் 149 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இந்நிலையில், து ஜூத்தி மெயின் மக்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு சில லட்ச ரூபாய்கள் மட்டும் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!