ஹைதராபாத்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது நாடெங்கிலும் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
ஜாலியன் வாலாபாக் போராட்டத்துக்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1913இல் கதர் இயக்கம், 1914இல் கொமகடா மாரு சம்பவம் பஞ்சாப் மக்களிடையே பெரும் புரட்சி அலையை ஏற்படுத்தின.
ரௌலட் சட்டம்
ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்கள் பஞ்சாபில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் தேசியமும், தேச பக்தியும் அனல்விட்டு எரிந்துகொண்டிருந்தது. இவர்களை அடக்குவது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்துகொண்டனர்.
அப்போது கடும் சட்டங்கள் இல்லாததும் ஆங்கிலேயரின் அச்சத்துக்கு காரணம். பஞ்சாபில் மாறிவரும் இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர ஆங்கிலேயர்கள் யோசித்தனர்.
காலா நாக் கார்ட்டூன்
அதன் விளைவாகப் புதிய சட்டம் ரௌலட் வடிவில் வந்தது. இச்சட்டத்திற்கு எதிராக உள்ளூர் நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து எழுத்தாளரும் பேராசிரியருமான பிரசாந்த் கௌரவ் கூறுகையில், “நோ தலீல், நோ அப்பீல், நோ வக்கீல்” என்றார். எந்த முகாந்திரமும் இல்லாமல், யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யலாம் - இதுதான் ரௌலட் சட்டம்.
ஒருவரைக் கைதுசெய்தால் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரில் தடுத்துவைக்கலாம். அப்போதைய நாளிதழ்கள் இதைக் கண்டித்துக் கண்டன குரல்கள் எழுப்பின. இதற்கிடையில் மார்ச் 22இல் காலா நாக் அதாவது கறுப்பு நாகம் என்று தலைப்பில் ரௌலட் சட்டத்தை வர்ணித்து கார்ட்டூன் ஒன்று வெளியானது.
ஜாலியன் வாலாபாக் போராட்டம்
இந்தக் கறுப்புச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டங்கள் நடைபெற்றன. பஞ்சாபின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. அமிர்தசரஸிலும் திட்டமிட்ட போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அமிர்தசரஸில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒரு போராட்டத்திற்கு டாக்டர் சத்யபால் மாலிக்கும் மற்றொரு போராட்டத்துக்கு டாக்டர் சஃபுதீன் கிச்லுவும் தலைமை தாங்கினார்கள்.
அப்போது காந்தியடிகளுக்கும் அழைப்புவிடுத்திருந்தார்கள். அவர் அப்போது மும்பையில் இருந்தார். அங்கிருந்து பஞ்சாப் வருகையில் பல்வால் நகரிலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதற்கிடையில் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ரௌலட் மசோதாவுக்கு ஆதரவாக 35 வாக்குகளும் எதிராக 20 வாக்குகளும் கிடைத்தன. இர்வின் அறிவுறுத்தலின்படி சத்யபால், கிச்லு ஏப்ரல் 10ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தர்மசாலா கொண்டுசெல்லப்பட்டனர்.
ஜெனரல் ஆர் டயர்
மூத்தத் தலைவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட பிறகு அமிர்தசரஸில் பதற்றம் நிலவியது. கத்ரா ஜெய்மல் சிங், ஹால் பஜார், உச்ச புல் பகுதியில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரிரு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. பஞ்சாப் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஓ டயர், நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொறுப்பை ஜெனரல் ஆர். டயரிடம் ஒப்படைத்தார்.
ஆர் டயர் ஜலந்தரிலிருந்து அழைக்கப்பட்டார். பொதுமக்களைப் பற்றி அவர் ஒரு விசித்திரமான பார்வைகொண்டிருந்தார். அவர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது பார்வையில் இந்தியர்கள் புழு பூச்சியைப் போன்றவர்கள். கடந்த காலங்களிலும் அவர் அவ்வாறே செயல்பட்டார்.
அணிவகுப்பு மிரட்டல்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு, ஜெனரல் ஆர் டயர் தனது முழு ஆயுதப் படைகளுடன் அமிர்தசரஸில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். தொடர்ந்து அணிவகுப்பும் நடத்தினார்.
உண்மையில் 90 விழுக்காடு மக்களுக்கு மார்ஷல் சட்டம் அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரியாது. 10 விழுக்காடு அறிந்த மக்களும் நகரத்தில் இருந்தனர்.
வைசாகி நாள்
இந்தத் தகவல் தெரியாததால், மக்கள் ஜாலியன் வாலாபாக்கில் ஒரு கூட்டத்தில் கூடினர். அன்றைய நாள் வைசாகி என்பதால் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் குருத்வாராவில் பிரார்த்தனை செய்யவும் பக்தர்கள் குழுமியிருந்தனர்.