தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% வரி.. கதறும் ஆன்லைன் கேமிங் பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்! - rummy

ஆன்லைன் கேமிங்கிற்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள நிலையில் அதன் சாதகம் மற்றும் பாதகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 12, 2023, 2:07 PM IST

Updated : Jul 12, 2023, 8:06 PM IST

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% வரி

டெல்லி:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது சரக்கு மற்றும் சேவை வரிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் வரி விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது ஆன்லைன் கேமிங் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநில முதலமைச்சர்கள் பலரின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்களான கேசினோ மற்றும் குதிரை பந்தயங்களில் பணம் கட்டி விளையாடும்போது அதற்கு 28 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு சார்பில் அந்த வழக்குகள் சந்திக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் காலத்தில் ஆன்லைன் கேமிங் மவுசு அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் மதிப்பை கருத்தில் கொண்டு வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. ஆனால் ஆன்லைன் கேமிங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கேமிங்கால் ஏற்பட்ட இழப்புகள்; கேசினோ, குதிரை பந்தயம், ரம்மி போன்ற ஏராளமான ஆன்லைன் கேமிங் விளையாட்டுகள் உள்ளன. இந்த விளையாட்டுகளில் அதிகமும் இளைஞர்கள்தான் தங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவதாக ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன. இதனால் அவர்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகள் கேமிங்கை தாண்டி சமூக வளர்ச்சிக்கோ அல்லது அவர்களின் தனிப்பட்ட வளரச்சிக்கோ ஒத்துழைக்காது என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க பலர் இந்த கேமிங்கிற்கு அடிமையாகி தங்கள் வாழ்கையினை தொலைக்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கும் சூழலில் அதற்கு சான்றாக சமீபத்தில் வெளியான சில செய்திகளை நினைவு கூறலாம்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவர், ஆன்லைன் ரம்மியில் பணம் வைத்து விளையாடி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நிலையில் அவரை அவரின் தம்பியே கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு தெரியாமல் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி ஊழியரான இளைஞர் மாரி செல்வம் என்பவர் ஆன்லைன் கேமிங் விளையாடி கடனாளி ஆன நிலையில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஏராளமான உதாரணங்கள் தமிழகத்தில் மட்டும் இருக்கிறது. இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் எண்ணிக்கை பட்டியலை கடந்து செல்லும்.

ஆன்லைன் கேமிங் தடை சட்ட மசோதா; இந்நிலையில்தான் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் 'ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதாவாகவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி இந்த மசோதா மீதான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கினார்.

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி வரி.. என்ன நடக்கும்? இந்தியாவில் ஏராளமான ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை செய்துள்ளன. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் இந்த ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை முடித்துக்கொண்டு மூட்டை கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய ஊழியர்களின் வேலை வாய்ப்பும் பொருளாதாரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஜிஎஸ்டி வரியும் ஆன்லைன் விளையாட்டும்;ஆன்லைன் கேமிங்கை ஒரு நபர் விளையாடும்போது ஒருமுறை விளையாட 1000 ரூபாய் பணம் செலுத்துகிறார் என்றால், அதில் 28 சதவீதம் வரி வசூலிக்கப்படும். அப்போது அவர் 720 ரூபாய்க்குதான் விளையாட முடியும். அதில் அவர் அந்த 720 ரூபாயும் விளையாடி வெற்றி பெறுகிறார் என்றால் அவருக்கு platform fees கட்டணம் போக 540 ரூபாய் கிடைக்கும். அதில் 30 சதவீதம் டிசிஎஸ் கட்டணமும் பிடிக்கப்படும். இப்படி மொத்தத்தையும் பிடித்து விட்டு அதில் விளையாடி என்ன லாபத்தை ஈட்டுவது என ஆன்லைன் கேமிங் பிரியர்கள் கதறுகின்றனர்.

பாரத்பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் டிவீட்; 'இந்தியாவின் ரியல் மணி கேமிங் இன்டஸ்ட்ரீக்கு RIP' என பாரத்பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங் விளையாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்தும் அதில் பெறப்படும் தொகை குறித்தும் பேசியுள்ள அஷ்னீர் குரோவர், கிடைக்கும் தொகையை வைத்து அந்த நபர் நடுவீட்டில் நீச்சல் குளமா கட்ட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இவ்வளவு நாள் fantasy gaming துறை தனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும்; தற்போது அது கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆன்லைன் கேமிங் துறையில் 10 பில்லியன் டாலர் காணாமல் போகும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Games24x7 சிஇஓ திரிவிக்ரமன் தம்பி பேட்டி; மத்திய அரசு விதித்துள்ள ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள Games24x7 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ திரிவிக்ரமன் தம்பி, இந்த வரி விதிப்பு மூலம் வெளிநாட்டு கேமிங் தளங்கள் மற்றும் முறைகேடாக இயக்கும் கேமிங் தளங்களில் மக்கள் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் இந்திய அரசுக்கு வரி இழப்பு, முதலீடுகள் வெளியேற்றம் போன்ற பிரச்னைகள் நேரிடும் என அறிவுறுத்தியுள்ள திரிவிக்ரமன் தம்பி அரசு இந்த விவகாரத்தில் அதீத கருதல் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை சமீப நாட்களில் திரிவிக்ரமன் தம்பி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம்ஸ் கிராஃப்ட், ஜூபி, வின்சோ போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை பகுத்தறிவுக்கு எட்டாதது எனவும் விமர்சித்துள்ளது. அதேபோல் இது குறித்து பேசியுள்ள AIGF-இன் CEO ரோலண்ட் லேண்டர்ஸ் 60 ஆண்டுகால ஒப்பந்த சட்டத்தை புறக்கணித்த செயல் எனவும் இதனால் ஒட்டுமொத்த இந்திய கேமிங் துறையும் அழிந்து லட்சக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் எனக்கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை;இந்தியவில் ஆன்லைன் கேமிங் துறை கடந்த 5 வருடங்களில் அசாத்திய வளர்ச்சியை பெற்றுள்ளது என தரவுகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் சுமார் 2.8 பில்லியன் டாலர் முதலீட்டை இந்த துறை ஈர்த்துள்ளது. அரசு அனுமதித்துள்ள கேமிங் துறைகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல பில்லியன் டாலர்கள் முடக்கி இந்த துறையை முன்னோக்கி இழுத்து வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆன்லைன் கேமிங் முதலீட்டாளர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

சமூக ஆர்வலர்கள் கருத்து;ஆன்லைன் கேமிங்க்கிற்கு அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பால் அந்த விளையாட்டில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்றால் அது மகிழ்ச்சிகரமான செய்திதான். ஆனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் துறைகளில் இருந்து விலகி வேறு வழியில் மக்கள் பணத்தை தொலைக்க நேரிடுமோ என்ற அச்சம் இதன் மூலம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:யாத்தே... கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147

Last Updated : Jul 12, 2023, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details