ஹைதராபாத்:தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊர் என்பதால், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஈடிவி பாரத் உடனான பிரத்யேக பேட்டியில், "ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் நிலை மிகவும் மேசமாக இருக்கிறது. இந்த தொகுதியின் பெயர் தான் ஜூப்ளி ஹில்ஸ் என உள்ளது.
மேலும் இந்த தொகுதி கோடீஸ்வரர்கள் அதிகம் வாழ்கின்றனர் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த தொகுதியின் நிலையில், தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கண்டிப்பாக ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். தேர்தல் போட்டி புதியது இல்லை. இது எனது சொந்த ஊர் என்பதால், கண்டிப்பாக வெற்றி பெறுவேன். ஜூப்ளி ஹில்ஸ் மக்களிடம் எனக்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானது. இங்கு உள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்காக நான் பணி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறினார்.