ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இறைச்சி நுகர்வு வெகுவாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அசைவ உணவை சாப்பிடும் வகையில் உணவுப் பழக்கம் மாறி வருகிறது. ஆட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால், ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 800 ரூபாயிலிருந்து 1,080 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவில்தான் இறைச்சி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என தெரிகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் 9.75 லட்சம் டன் செம்மறியாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை சராசரியாக ஒரு கிலோ 600 ரூபாய் என கணக்கிட்டால் 58,500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு கிலோ செம்மறியாட்டு இறைச்சி 600 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், தெலங்கானாவில் சில்லறை சந்தைகளில் 1000 ரூபாய் வரை விற்கப்படுவதாக இந்திய தேசிய இறைச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெலுங்கானாவில் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால் தினமும் 80 முதல் 100 லாரிகளில் செம்மறி ஆடுகள் தெலுங்கானாவுக்கு வருகின்றன. தெலுங்கானா மாநில செம்மறி மற்றும் வெள்ளாடு மேம்பாட்டு சங்கம், செம்மறி ஆடு வளர்ப்பு, அவற்றின் விற்பனை, மாநிலத்தில் அதிகரித்து வரும் இறைச்சிக்கான தேவை குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வறிக்கையில், "தெலுங்கானாவில் 2015-16ல் செம்மறியாட்டு இறைச்சி உற்பத்தி 1.35 லட்சம் டன்னாக இருந்தது. இது 2020-21ல் 3.03 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 3.50 லட்சம் டன்னுக்கு மேல் விற்பனையாகும் என்றும், இதற்கு மக்கள் 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த இறைச்சி விற்பனை மதிப்பு 35 ஆயிரம் கோடியை எட்டக்கூடும்.