தெலங்கானா:ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அதன்படி, தெலங்கானா மாநிலம் உருவாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, பத்தாவது ஆண்டு தொடங்கியுள்ளது.
தெலங்கானாவின் பத்தாம் ஆண்டு உதய தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட தெலங்கானா அரசு முடிவு செய்தது. 105 கோடி ரூபாய் செலவில், ஜூன் 2ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு உதய தினம் கொண்டாடப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்தார். தினந்தோறும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தெலங்கானா உதய தினம் இன்று(ஜூன் 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் தெலங்கானா மக்களுக்கு முதலமைச்சர் சந்திரசேரராவ் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், பத்தாவது ஆண்டில் தெலங்கானா அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஆறு தசாப்தங்களாக தெலங்கானா மாநிலத்திற்காக மக்கள் செய்த போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவு கூர்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஆளுநர் வரும்போது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது’ - தமிழிசை சௌந்தரராஜன்
இதைத் தொடர்ந்து, தெலங்கானாவில் உதய தின நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஆனால், உதய தின விழாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசிடமிருந்து எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், உதய தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.