ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்த சிக்கோட்டி பிரவீன் என்பவர் சூதாட்ட விடுதி நடத்தி வருகிறார். இவர் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை வெளிநாடு அழைத்துச் சென்று சூதாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் நடத்திய சூதாட்டத்தில் வென்றவர்களுக்கு ஹவாலா மூலம் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தன.
இதைத்தொடர்ந்து தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் சிக்கோட்டி பிரவீனுக்கு தொடர்புடைய எட்டு இடங்களில் வருவாய் புலனாய்வுத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பிரவீனின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டத்திற்கு புறம்பாக மலைப்பாம்புகள், பறவைகள், குதிரைகள், நாய்கள், ராட்ஷத பல்லிகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்கள் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அரிய வகை பாம்பு, பல்லிகளுடன் சிக்கோட்டி பிரவீன் சிக்கோட்டி பிரவீனின் பண்ணை வீட்டில் அரிய வகை உயிரினங்கள் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆறு மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் சிக்கோட்டி பிரவீன் நடத்திய சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டதாக தெரியவந்தது. இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று சூதாட்டம் நடத்தியது கண்டறியப்பட்டது.
குறிப்பாக சிக்கோட்டி பிரவீன் மற்றும் முகவர் மாதவரெட்டி ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிக்கோட்டி பிரவீன், மாதவ் ரெட்டி, சம்பத் உள்ளிட்ட 5 பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஐந்து பேரும் வரும் 1ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"PC" என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது யார்...?