ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்ட தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்), கடந்த ஆண்டு இறுதியில் பாரத ராஷ்டிரிய சமிதி என கட்சியின் பெயரை மாற்றினார்.
இந்த பெயர் மாற்றத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஆர்.எஸ். கட்சி போட்டியிடும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) தெரிவித்தார். இந்நிலையில் தெலங்கானா மாநிலம், கம்மத்தில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் தேசிய மாநாடு நடைபெற்றது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது பெரிய அணியை உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். அதனால், இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களின் முதலமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்த, அடுத்தநாளான இன்று கூட்டம் நடத்தப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கே.சி.ஆரின் அழைப்பை ஏற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மாண், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர், தெலங்கானா மாநிலம், கம்மத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து கம்மம் பொதுக் கூட்டத்தில் பேசிய கே.சி.ஆர்., "நீர்வளம் மற்றும் விளைநிலத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாட்டில் 70ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் உள்ள நிலையில், 20 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முறையான தண்ணீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் சென்னை மாநகரம் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறது.