ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, அம்மாநில பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அந்நகரின் ஹப்சிகுடா பகுதியில் பரப்புரையின்போது, பாஜக வேட்பாளர் ஹைதராபாத் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நகரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ரோஹிங்யா இஸ்லாமியர்களை விரட்டியடிக்க துல்லிய தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் ஆகிய கட்சியினர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாக்களின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்று ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றிப்பெற முயற்சிக்கிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டினார்.