புதுச்சேரி:மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாரதி பூங்காவில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்குப் பாரதியார் பாடல்கள் இசைக்க நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பாரதியாரின் புகழைப் பாடும் அளவிற்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. துணைநிலை ஆளுநர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பாரதியின் பிறந்தநாளில் நாம் சபதம் ஏற்போம்
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகள், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கக் கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதி பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். பாரதியார் அவரது வாழ்நாளில் 10 ஆண்டுகள், மூன்றில் ஒரு பங்கு புதுச்சேரியில் கழித்திருக்கிறார். புதுச்சேரியில் எல்லா இடங்களிலும் அவருடைய ஆன்மா உலவிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.
பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தேன். மரியாதைக்குரிய முதலமைச்சருடன் ஆலோசனை செய்து இதற்காகக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். வெளிநாடுகளிலிருந்தும் தமிழர்கள் எனக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இத்தகைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.