புதுச்சேரி: கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று (நவம்பர் 20) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு அவர் மதிய உணவினை பரிமாறினார். அப்போது சிறுவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.
ஒன்றிய குழு வருகை
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தற்போது இருக்கும் பாலம் உயரம் குறைவாக இருப்பதால், புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான திட்ட வரைவு தயாராக இருக்கிறது. இது போன்ற அபாயகரமான சூழல்களைத் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும்.
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய குழு கனமழை பாதிப்புகளை (Heavy Rain damage) மதிப்பிட வருகின்ற 22ஆம் தேதி புதுச்சேரி வருகிறது. ஒன்றிய குழுவை அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார். நானும், முதலமைச்சரும் ஒன்றிய குழுவை சந்திக்கவுள்ளோம்.