சென்னை:ஜி20 அமைப்பின், 2022 - 23ஆம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் இன்று(ஜன.31) முதல் பிப். 2ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு கல்வித் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முதல் நாளில், 'கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில், மூன்று அமர்வுகளாக கருத்தரங்கம் நடக்கிறது. இதில், திறன் மேம்பாடு குறித்த அமர்வில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் திறன்மேம்பாட்டு பயிற்சி குறித்து இன்னசென்ட் திவ்யா பேசினார்.
அவர் கூறியதாவது, "தமிழ்நாடு மாணவர்கள் இடையே ஆங்கிலத் திறனை அதிகரிப்பதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதன்மூலம் உலக நாடுகளில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட முடியும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்தில் 15 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம்.
முன்னணி நிறுவனங்கள் மூலம் செய்முறை பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். பள்ளி, கல்லூரி, இடைநிற்றல் மாணவர்கள், வேலை செய்து கொண்டிருப்பவர்கள், மகளிர் போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் (விண்ணப்பிக்க: https://www.tnskill.tn.gov.in/).