பெங்களூரு (கர்நாடகா):பானசவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கம்மனஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் இன்று (செப்.4) மாலை 5 மணியளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, தமிழ்நாடு எண் பொருத்தப்பட்டிருந்த வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அந்நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் கீரைத்துறையைச் சேர்ந்த திமுக பிரமுகர் வி.கே. குருசாமி (55) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தொழில் நிமித்தமாக விமானம் மூலம் பெங்களூரு வந்திருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காயமடைந்த குருசாமியின் மீது மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசியலில் இருக்கும் குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்திருக்கிறார்.
2002ஆம் ஆண்டு குருசாமிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர், மறைந்த ராஜபாண்டி கும்பலுக்கு இடையே தகராறு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சின்னுச்சாமி என்பரது கொலை வழக்கில் குருசாமி ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.