தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதம்!

ஜூலை 11 அன்று நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதம்!
ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதம்!

By

Published : Jul 6, 2022, 4:59 PM IST

Updated : Jul 6, 2022, 5:07 PM IST

கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானங்களையும் ஆலோசிக்கலாமே தவிர, அதனை நிறைவேற்றக்கூடாது’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 6) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரர்கள் தரப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது, நீதிமன்றம் சொல்லும் வழிகாட்டுதலுக்கு ஈடாகுமா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியினுள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத ஒருவரால் கட்சியின் உள் ஜனநாயகத்தை முடக்க முயற்சி செய்யப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால், அந்த உத்தரவின் சட்டப்பூர்வமான தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் தலையிட இடைக்கால தனி நீதிபதி சரியாக மறுத்துவிட்டது. ஆனால், டிவிஷன் அமர்வு அதை மாற்றியுள்ளது’ என கூறினார்.

இதன் பின்னர் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், “தனி நீதிபதி உத்தரவில் எந்த காரணத்தையும் பதிவிடவில்லை. ஆனால், நீதிபதிகள் அமர்வு நியாயமான உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துடன் மட்டுமே தொடர்புடையது” என தெரிவித்தார்.

இதற்கிடையில், “ஒரு கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இவை அனைத்தும் கட்சிக்குள் தான் நடத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களை பொதுக்குழுவில் விவாதிப்பதற்கு பதிலாக ஏன் நீதிமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், “விதிகளை மீறி கூட்டம் நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடலாம்’ என வாதிட்டார். இவ்வாறு ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கோள்காட்டிய நிலையில், “இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, அதே நிலையில் இருப்பது அவசியம்’ என நீதிமன்ற அமர்வு கூறியது.

பின்னர் நீதிபதிகள் தரப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “ஜூலை 11 அன்று நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தைப் பொறுத்தவரை, சட்டப்படி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jul 6, 2022, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details