தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தனக்கு, தமிழ்நாட்டின் அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் முன்னதாக புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட அன்றைய எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடும் அழுத்தம் காரணமாக, பெண் எஸ்பியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபியை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கடந்த ஜுலை 29ஆம் தேதி சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தன் மீதான் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறும் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.