டெல்லி : எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டப் பலரை பெகாசஸ் என்ற மென்பொருள் கொண்டு என்.எஸ்.ஓ என்ற குழுமம் ஒட்டுக்கேட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்த பெகாசஸ் மென்பொருளை இந்திய அரசு பயன்படுத்துவதால், இந்த விவகாரத்தில் அரசின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அரசு இந்தக் குற்றச்சாட்டை ஒன்றிய அரசு மறுத்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. மேலும், இது குறித்து சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுத்தனர்.
இதற்கிடையில் மூத்தப் பத்திரிகையாளர் உள்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.
முன்னதாக, அரசு பெகாசஸ் செயலியை கொண்டு பொதுமக்களை ஒட்டுகேட்டதா, இல்லையா என்பதை மட்டும் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பியது.
இதற்கு ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கையில், "நீதிமன்றத்தில் ஒளிவுமறைவின்றி அரசு இந்த வழக்கை எதிர்கொள்ள விரும்புகிறது. அதேவேளை, தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசு பொது வெளியில் சமர்ப்பிக்க இயலாது.
எனவே, இந்த விவகாரத்தின் நடைமுறை சிக்கல்களை நீதிமன்றம் உணரவேண்டும். இந்த விவகாரம் குறித்து ஆராய அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க நீதிமன்றம் அனுமதித்தால், அந்தக் குழுவின் முன்னர், அரசால் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா எனத் தெரிவிக்கத் தயார்" என்றார்.
அதன்பின்னர் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணைக்கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இந்த விவகாரத்தில் விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினர்.
இந்நிலையில், நீதிபதி ரமணா செப். 23ஆம் தேதி விசாரணையின்போது, “உச்ச நீதிமன்றம் பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைக்க உத்தேசித்துள்ளது. இந்தக் குழுவில் நாங்கள் உறுப்பினர்களாக பரிந்துரை செய்ய நினைத்த சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுப்புத்தெரிவித்தனர்.
இதனால், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் வல்லுநர் குழு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வழக்கில் இன்று (அக்.27) தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், “பத்திரிகையாளர் மட்டுமல்ல அனைவரின் ரகசியமும் பாதுகாக்கப்பட வேண்டும், பெகாசஸ் விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு இருப்பது போல் தெரிகிறது” என்றும் என்.வி. ரமணா தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் விசாரணை நடைபெறும் இக்குழுவில், அலோக் ஜோஷி, சந்தீப் ஓபராய் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி