டெல்லி:அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தன்னை அறிவிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 46-வது வழக்காக இந்த வழக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறினார்.அப்போது, எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணை என்பது வெகுநேரமாகும் ஆகும் என்று கூறி இறுதியாக விசாரிக்கிறோம் என நீதிபதிகள் கூறி சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர். சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் வழக்கின் விசாரணையானது தொடங்கியது.
அப்போது, ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு, வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்த தகவலைப் பதிவேற்றவில்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் இருதரப்பும் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டியது தானே? என நீதிபதிகள் கருத்து கூறினர்.
அப்போது, இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் கையெழுத்திடத் தயார் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பு வேட்பாளரை ஓபிஎஸ் தரப்பு ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு இடையில் தேர்தல் ஆணையம் சார்பில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை, இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது.