தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - அமலாக்கத்துறை

Minister Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு வழக்கில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று தெரிவித்த நீதிமன்றம், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Aug 7, 2023, 10:57 AM IST

Updated : Aug 7, 2023, 11:47 AM IST

டெல்லி: சட்டவிரோதப் பணப்பறிமாற்ற வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவரது நீதிமன்ற காவல் ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதக் காவலில் வைத்ததாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்றும், அவரை நீதிமன்ற காவலில் விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர், ஆட்கொணர்வு வழக்கு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பிலும் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்குகளை கடந்த இரண்டு வாரங்களாக உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 7) உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்றும், அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்தது சட்டப்பூர்வமானதுதான் என்றும் கூறி, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சட்டப்படி கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாஜியை வரும் 12ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - லட்சக் கணக்கில் பணம் பறிமுதல்!

Last Updated : Aug 7, 2023, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details