டெல்லி:2002ஆம் நடந்த குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 11 பேரை முன்விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜன.08) ரத்து செய்துள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது ரயில் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இந்த கலவரத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பில்கிஸ் பானு குடும்பத்தை 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. மேலும், அப்போது கர்ப்பினியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து பில்கிஸ் பானு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
சுமார் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்களை கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக குஜராத் அரசு முன்விடுதலை செய்தது. இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் பல்வேறு தரப்பினரும் 11 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனி அமர்வு ஒன்றினை அமைத்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அமர்வு இந்த வழக்கை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி விசாரிக்கத் துவங்கியது.
பின்னர் இந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 11 பேரை விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை, வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் மகாராஷ்டிர அரசு தான் விடுதலை செய்ய முடியும் எனத் தெவித்த நீதிமன்றம், 11 பேரை விடுதலை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?