டெல்லி: காங்கிரஸ் எம்பி சசிதரூர், கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் சுனந்தா புஷ்கர் என்பவரை 3ஆவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடந்த சுனந்தா புஷ்கர் சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல் துறையினர், சுனந்தா புஷ்கரின் மரணத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர்க்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியது. மேலும் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சசிதரூர் எம்பி மீது டெல்லி காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்பி சசிதரூரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஏறத்தாழ 15 மாதங்களுக்கு பின் டெல்லி காவல் துறையினர், சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
மேல்முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு குறித்து எம்பி சசிதரூர் விளக்கமளிக்க உத்தரவிட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஈஷா மைய நில ஆக்கிரமிப்பு வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு...