இந்தோனேசியாவின் பாலியில் நடந்து வரும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆண்டுதோறும் மூவாயிரம் இந்தியர்களுக்கு சிறப்பு விசா வழங்க பிரிட்டன் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”உலகில் முதல் முறையாக இந்தியா தான் சிறப்பு விசா திட்டத்தின் கீழ் நன்மை அடைகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்தியா - பிரிட்டன் இடையேயான மைக்ரேஷன் - மொபிலிட்டி பார்ட்னர்ஷிப் வலிமை அடையும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து ரிஷி சுனக்கின் அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “இன்று பிரிட்டன் - இந்தியா யெங் ப்ரொபஷனல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 18 முதல் 30 வயதுடைய திறமையான 3000 இந்தியர்கள் பிரிட்டன் நாட்டில் 2 வருடம் தங்கி பணியாற்ற முடியும்” எனக் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசிடம் இருந்து இந்த அறிவிப்பு இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 2 நாள் ஜி20 உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி மற்றும் ரிஷி சுனக் சந்தித்துப் பேசிய சில மணிநேரத்தில் வெளியானது.
இங்கிலாந்தில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் செய்த முதலீடுகள் மூலம் இங்கிலாந்து முழுவதும் சுமார் 95 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வரும் 3000 இந்தியாவில் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் விசா மூலம் இந்த இந்தியர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.