தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"சுகேஷ் எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்" - ஜாக்குலின் பெர்னாண்டஸ்! - அமலாக்கத்துறை விசாரணை

சுகேஷ் சந்திரசேகர், தனது உணர்வுகளுடன் விளையாடி தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

sukesh
sukesh

By

Published : Jan 19, 2023, 4:30 PM IST

டெல்லி: பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தபோதே தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் மோசடியாக பெற்ற பணத்தை சுகேஷ் பல நடிகைகளுக்கு செலவழித்ததாகத் தெரியவந்தது. இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நடிகை நோரா பதேகியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொழில்முறை பயணமாக துபாய் செல்ல அனுமதிகோரி ஜாக்குலின் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநரகம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று(ஜன.18) டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகேஷ் சந்திரசேகர் தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "சுகேஷின் உதவியாளர் பிங்கி இரானி, சுகேஷை ஒரு அரசு அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்து வைத்தார். பிறகு சுகேஷ் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்றும், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும் கூறிக் கொண்டார். தென்னிந்திய மொழிகளில் தான் நிறைய திரைப்படங்களை எடுக்கப்போவதாகவும், அதில் இருவரும் சேர்ந்து வேலை செய்யலாம் என்றும் கூறினார்.

சுகேஷ் என்னை ஏமாற்றி, எனது வேலையையும், வாழ்வாதாரத்தையும் கெடுத்துவிட்டார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு தான், அவரது உண்மையான பெயரும் அவரது குற்றப்பின்னணியும் தெரியவந்தது. சுகேஷின் குற்றப்பின்னணி குறித்து பிங்கி இரானிக்கு தெரியும், ஆனால் அவர் என்னிடம் கூறவில்லை. இருவரும் திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டனர். சுகேஷ் எனது உணர்வுகளுடன் விளையாடி எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹன்சிகாவின் "லவ் ஷாதி டிராமா" பர்ஸ்ட் லுக் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details