பெங்களூரு (கர்நாடகா): பத்திரிகை ஆசிரியரின் குடும்பத்தினர் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சங்கர் (54). இவரது மனைவி பாரதி (50). இவர்களுக்கு சிஞ்சனா (33), சிந்துராணி (30), என்ற மகள்களும், மது சாகர் (27) என்ற ஒரு மகனும், 3 வயது பேத்தியும், ஒன்பது மாத பேரக் குழந்தையும் இருந்தனர். சங்கர், 'சாசகா' என்ற வாராந்திர பத்திரிகை நடத்திவருகிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவைப் பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல்களைத் திறக்க முற்பட்டபோது, அவையும் மூடப்பட்டிருந்தன; வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சங்கர் வீட்டிற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சங்கரின் மனைவி, மகள்கள், மகன் ஆகிய நான்கு பேரும் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் 9 மாத ஆண் குழந்தை தரையில் இறந்து கிடந்தது.
சங்கரின் 3 வயது பேத்தி மட்டும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தது. உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காகச் சேர்த்தனர். செப்டம்பர் 12ஆம் தேதியே இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும், குடும்பத் தகராறு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலை எப்படித் தீர்வாகும் மேலும், 9 மாத குழந்தையை இவர்கள் கொன்றுவிட்டு, மற்றவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், 3 வயது குழந்தை உயிரோடு இருந்திருக்கிறது. ஒரு வேளை 9 மாத குழந்தை உணவில்லாமல் இறந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அனைவரது உடல்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே மேற்கொண்டு தகவல்கள் கூற முடியும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.