இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் சீறிப்பாய்ந்தது பெங்களூரு: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கும் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை இன்று (ஜூலை 14) நோக்கி 02:36 மணிக்கு சீறிப்பாய்ந்தது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி இந்தியாவின் கனவை சந்திரயான் 3 விண்கலம் சுமந்து சென்றது என வாழ்த்து தெரிவித்துள்ளார். பூமியில் இருந்து நிலவை நோக்கி பாய்ந்த இந்த விண்கலம் நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக (Chandrayaan 3 into orbit) இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் 3 திருப்தியான இயக்கம்:சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து சென்ற எல்.வி.எம் 3 ராக்கெட் எம்4 S200 திட பூஸ்டர்கள் ராக்கெட்டில் இருந்து தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளன. இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக உலக நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் இந்த சந்திரயான் 3 விண்கலம் புவி நீள்வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட நிலையில், அதன் இயக்கம் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோவிற்கு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். மேலும், இந்த சாதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் என்றும்; ஒவ்வொரு இந்தியரின் கனவையும் இந்த சந்திரயான் வானை நோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து: சந்திரயான் 3 வெற்றி பெற்ற நிலையில், இது குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 'விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3-ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும் இதற்காக, அயராது உழைத்த அனைவரின் உழைப்பும் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளதை நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலவின் சந்திரயான் 3 பணிகள் என்ன?: கடந்த முறை சந்திரயான் 2 விண்கலத்தை ஏவும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விகள் இம்முறை நடக்காமல் இருக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பலகட்ட சோதனைகளில் ஈடுபட்டு, பல நுண்ணிய தொழில்நுட்ப செயல்பாடுகளை திறம்பட செய்துள்ளனர். இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் சென்றடைந்ததும் லேண்டரை சாஃப்ட் லேண்டிங் மூலம் தரையிறக்கும் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து எல்விஎம்3 எம்4 ரோவர் என்ற (LVM3 M4 vehicle) சிறிய ரக ரோபா மூலம் நிலவை ஆய்வு செய்ய உள்ளது.
நிலவில் தரையிரங்கும் ரோவர் சந்திரனின் மேற்பரப்பு, வெளிப்புறத்தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். நிலவில் உள்ள புவியியல், கனிம வளம் மற்றும் கலவை குறித்த அரிய அறிவியல் பூர்வமான தரவுகளை சேகரிக்கும். நிலவில் நீர்மூலக்கூறுகள் இருப்பதை ஆராய்வதுடன், அதன் பரிணாமம், அதன் புவியியல் செயல்முறைகள் மற்றும் எதிர்கால மனிதப் பணிகளுக்கான ஆதாரம், அதன் திறனைப் பற்றிய மனிதர்களின் புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த இந்த சந்திரயான் 3 மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்றும் பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் தனது ஆராய்ச்சி பணியை தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் (Chandrayaan 3 Program Director Veeramuthuvel) நம்பிக்கை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: chandrayaan 3: உலகம் உற்றுநோக்கும் இந்திய சரித்திரம்.. சந்திரயான் - 3 குறித்த முழு விபரம்!