தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள நியலகொண்டபள்ளி அரசு ஆதர்ஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அதே பகுதியை சேர்ந்த குண்டு அஞ்சய்யா மற்றும் சாரதாலா தம்பதியரின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடியுள்ளார். அப்போது திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவ கல்வி ஆசிரியர்கள், மாணவிக்கு கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் முதலுதவி கொடுத்துள்ளனர்.
ஆனால் மாணவி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டுள்ளனர். இந்த நிலையில்தான் மாணவி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள இருதய நோய் நிபுணரான மருத்துவர் கோனேட்டி நாகேஷ்வர் ராவ், "இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்காதீர்கள். அது அவர்களின் இருதயத்தை செயலிழக்க செய்து விடும் எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக உடற்பயிற்சி, நடனம் உள்ளிட்டவைகளை அந்த குழந்தைகள் செய்யவே கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக குழந்தைகள் மத்தியில் 50 வகையான இருதய நோய்கள் உள்ளன எனக்கூறிய கோனேட்டி நாகேஷ்வர் ராவ், இதில் இருதயத்தில் ஏற்படும் துளை, இருதய ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்டவை அடங்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், இதயத்தில் துளை உள்ள நபர்கள் பெரியவர்கள் ஆனாலும் சரி, சிறியவர்கள் ஆனாலும் சரி, அவர்கள் உடலை அதிகம் வருத்தி எதையும் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார். அப்படி செய்யும்போது, நுரையீரலில் ரத்த அழுத்தம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து, சுவாசப் பாதையில் சுத்திகரிக்கப்பட வேண்டிய ரத்தம் அசுத்தமாக உடலுக்குள் சென்று மூளையின் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை தொடர்ந்து பலர் இறக்க நேரிடும் என கோனேட்டி நாகேஷ்வர் ராவ் கூறியுள்ளார். இப்படி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பகட்ட அறிகுறிகளை கண்டறிவது எப்படி? இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவார்கள். பால் குடிக்க நினைத்தாலும் அவர்களால் குடிக்க முடியாது. அப்படியே குடித்தாலும் குறைந்த அளவு குடித்து விட்டு தூங்கி விடுவார்கள். பால் குடிக்கும்போது அந்த குழந்தைகளுக்கு அதீத வியற்வை வெளியாகும். நிமோனியாவால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். சாதரண குழந்தைகளை போல் விளையாடாமல் மிகவும் மந்தமாக இருப்பார்கள்.
இதையும் படிங்க:மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்.? ட்ரோபோனின் ரத்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்