டெல்லி : நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மூன்று பேர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியுள்ளது. அரசுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் இன்று (ஜூலை 19) முடங்கின.
இந்தத் தகவல் திருட்டில் இஸ்ரேலிய நிறுவனமான பெகாசஸ் (Pegasus) நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதாவது நாட்டின் முக்கிய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. அவர்களின் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தால் விவேகமானதாக இருக்கும். இல்லையென்றால் வருங்காலங்களில் இது பாஜகவை காயப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம் ஜிஎஸ்டி - சுப்பிரமணியன் சுவாமி