திருவனந்தபுரம்: கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், திருவனந்தபுரம் நகரில் கடந்த வாரம் நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானதில் தலையில் காயம் அடைந்து சிகிச்சைப்பெற்று வந்த 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.
நெய்யாற்றின்கரை குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த அஜின் ஏ.எஸ். செப்டெம்பர் 9ஆம் தேதி அருவியோட் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் குறுக்கே தெருநாய் பாய்ந்து விபத்துக்குள்ளானார். அப்போது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த இளைஞன் இன்று காலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்னர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் கிளப்பின் ஊழியர் ஸ்ரீனிவாசன், கடந்த சில நாட்களுக்கு முன் இரவு இங்குள்ள தீயணைப்பு நிலைய சாலை வழியாக ஸ்கூட்டரில் சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது தெருநாய்கள் கூட்டத்தால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். அவர் தனது நண்பருடன் தனது வேலை முடித்து வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தபோது, ஒரு நாய் கூட்டம் அவரை மோசமாகத் தாக்கி, அவரது காலை கடித்துள்ளது.