வெங்கடகிரிகோட்டா:காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால், சமீபகாலமாக ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகள், காதலுக்கு எல்லையும் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகின்றன. அந்த வகையில், புதிய வரவாக இணைந்து உள்ளார் இலங்கையைச் சேர்ந்த இளம்பெண். சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அந்த இளம்பெண், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தனது காதலனை கரம் பிடித்து திருமண பந்தத்தில் இணைந்து உள்ளார்.
பேஸ்புக் எனப்படும் முகநூலில்தான் அப்பெண், தனது காதலனை அடையாளம் கண்டு உள்ளார். சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து உள்ள நிலையில், அவரின் விசா காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. விசாவில் குறிப்பிடப்பட்டு உள்ள காலம் வரைதான் அப்பெண் இந்தியாவில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரி, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த லெட்சுமணன் உடன் 7 ஆண்டுகள் காதல் இருந்து வந்து உள்ளது. தங்களது இந்த காதல் உறவை திருமண பந்தம் என்ற நிலைக்கு உயர்த்த, கடந்த ஜூலை 8ஆம் தேதி விக்னேஸ்வரி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார்.
கொத்தனாராக வேலை பார்த்து வரும் லெட்சுமணன், தன்னை நாடி கடல் கடந்து வந்து உள்ள விக்னேஸ்வரியை உற்சாகத்துடன் வரவேற்று, தனது வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார். லெட்சுமணன் - விக்னேஸ்வரி காதலுக்கு லெட்சுமணனின் குடும்பம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அவர்களின் ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் வெங்கடகிரிகோட்டா பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் திருமணம் நடைபெற்று உள்ளது.