பெங்களூரு:கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், பரமேஸ்வர் ஆகியோர் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "கடந்த 25ம் தேதி விஜயபுரா மற்றும் பிற பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் பரப்புரை செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமித்ஷா பேசினார். அவரது பேச்சு பொய்யான குற்றச்சாட்டுக்களுடன், மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.